மாணவன் மர்ம சாவு விவகாரத்தில் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
பூதப்பாண்டி அருகே மாணவன் மர்ம சாவு விவகாரத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் விசாரணை நடத்தினார்.
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே மாணவன் மர்ம சாவு விவகாரத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் விசாரணை நடத்தினார்.
மாணவன்
கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்தவர் நிஜிபூ. இவர் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சுஜிதா. இவர்களுக்கு 1 மகன், 1 மகள் இருந்தனர். இதில் மகன் ஆதில் முகமது (வயது 12) 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
சுஜிதாவின் சொந்த ஊர் குமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் உள்ளது. இந்தநிலையில் சுஜிதா குழந்தைகளுடன் அங்கு வந்தார். கடந்த 6-ந் தேதி மதியம் ஆதில் முகமது வீட்டில் சாப்பிட்டு விட்டு வெளியே சென்றான். ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
சாவில் மர்மம்
இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் மாயமான மாணவன் 2 நாட்கள் கழித்து திட்டுவிளையை அடுத்த மணத்திட்டை பகுதியில் உள்ள குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.
மேலும் மகன் சாவில் மர்மம் இருப்பதாக சுஜிதா பூதப்பாண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தனிப்படையினர் நடத்திய விசாரணையிலும் முன்னேற்றம் இல்லை.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதற்கிடையே நேற்று மாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் திட்டுவிளை பகுதியில் விசாரணை மேற்கொண்டார். இறந்த மாணவனுடன் பழகிய நண்பர்களின் வீடுகளுக்கு சென்று விசாரித்தார். பின்னர் ஆதில் முகமது பிணமாக கிடந்த குளத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மாணவன் சாவு விவகாரத்தில் நேரடியாக விசாரணை நடத்தியதால் இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.