‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-05-14 21:14 GMT
குப்பைகளை அகற்ற வேண்டும்
கோபி மொடச்சூரில் வாரந்தோறும் சனிக்கிழமை சந்தை கூடுகிறது. இந்த சந்தை பகுதியில் ஓரிடத்தில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. அந்த குப்பையில் சிலர் தீ வைத்து விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் கரும்புகை எழும்புவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த குப்பையில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சந்தையில் கடை அமைக்கும் உரிமையாளர்களும், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களும் துர்நாற்றம் தாங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே சந்தை பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், கோபி.


ரோட்டில் ஓடும் சாக்கடை நீர்
ஈரோடு ரெயில் நிலையம் முன்பு ரோட்டில் சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு அதில் இருந்து ரோட்டில் கழிவுநீர் ஓடுகிறது. இதனால் அந்த ரோட்டில் குளம் போல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பல்வேறு தொற்று நோய்கள் பரவவும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இதை சரிசெய்யவேண்டும்.
வாணி, ஈரோடு.


பூங்கா சுத்தப்படுத்தப்படுமா?
கோபி சக்தி சாந்தி நகர் பகுதியில் ஒரு சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் தினமும் வந்து விளையாடுவார்கள். மேலும் பெரியவர்கள் தினமும் அந்த பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக பூங்காவை சுற்றிலும் கான்கிரீட் தளம் போடப்பட்டுள்ளது. மேலும் பூங்காவில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் உட்காருவதற்காக இருக்கைகளும் போடப்பட்டு உள்ளன. ஆனால் தற்போது பூங்காவில் செடி, கொடிகள் அதிகமாக வளர்ந்து உள்ளது. செடி, கொடிகளுக்கு இடையே விஷப்பூச்சிகள் இருந்தால் தெரியாது. இதனால் பூங்காவுக்கு வரும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பூங்காவில் வளர்ந்து உள்ள செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், கோபி. 



குண்டும்-குழியுமான சாலை
ஈரோடு இடையன்காட்டுவலசு ரோடு குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்தப்பகுதியில் விபத்து நடக்கிறது. மேலும் இந்த ரோட்டில் அரசு பள்ளிக்கூடம் உள்ளது. இதனால் மாணவ- மாணவிகள் பெரும் சிரமப்படுகிறார்கள். எனவே ஆபத்தான குண்டும்-குழியுமான சாலையை சரி செய்ய வேண்டும்.
இளங்கோ, ஈரோடு.

ஓடையை தூர்வார வேண்டும்
கோபியில் இருந்து குன்னத்தூர் செல்லும் ரோட்டில் மொடச்சூரில் கிறிஸ்தவ கல்லறை பகுதி உள்ளது. அதன் அருகில் கீரிப்பள்ளம் ஓடை செல்கிறது. அந்த ஓடையில் செடி, கொடிகள், ஆகாயத்தாமரைகள் வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் ஓடையில் கழிவுநீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதை தடுக்க ஓடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மொடச்சூர்.

வேகத்தடை தேவை
ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து வரும் பஸ்கள் நாச்சியப்பா வீதி வழியாக வெளியேறுகின்றன. இதேபோல் பல்வேறு வாகனங்களும் நாச்சியப்பா வீதியாக வருகின்றன. அவ்வாறு வரும் வாகனங்கள் வாசுகி வீதி மற்றும் தில்லை நகர் வீதிகளை இணைக்கும் மெயின் ரோடு வழியாக செல்கிறது. இந்த வீதிகள் வழியாகத்தான் மாணவ- மாணவிகள், ஜவுளி, வணிக நிறுவனங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் அதிக அளவில் செல்கின்றனர். ஆனால் இந்த 3 வீதிகளை இணைக்கும் பகுதிகளில் வேகத்தடை சரியாக அமைக்கப்படவில்லை. இந்த வீதிகளை வாகனங்கள் கடந்து செல்லும்போது விபத்து ஏற்பட்டு விடுமோ என அச்சத்தில் பொதுமக்கள் செல்கின்றனர். எனவே 3 வீதிகள் சந்திக்கும் இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
கோபாலகிருஷ்ணன், ஈரோடு. 

மேலும் செய்திகள்