மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பிரியங்கா காந்தியை கர்நாடகத்தில் இருந்து தேர்ந்தெடுக்க முடிவு

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பிரியங்கா காந்தியை கர்நாடகத்தில் இருந்து தோ்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2022-05-14 20:57 GMT
பெங்களூரு:

மாநிலங்களவை தேர்தல்

  நாடு முழுவதும் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கர்நாடகத்தில் 4 மாநிலங்களவை பதவிகள் காலியாக உள்ளன. அதில், 2 பதவிகள் பா.ஜனதாவுக்கும், ஒரு பதவி காங்கிரசுக்கும் கிடைப்பது உறுதியாகி உள்ளது. மற்றொரு பதவிக்கு பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

  இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் கர்நாடகத்தில் இருந்து முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ், ஆஸ்கர் பெர்னாண்டஸ் தேர்வாகி இருந்தனர். இவர்களில் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மரணம் அடைந்து விட்டார். இதனால் இந்த முறையும் ஜெய்ராம் ரமேஷ் கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.

பிரியங்கா காந்தியை...

  இந்த நிலையில், ஜெய்ராம் ரமேசுக்கு பதிலாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தியை கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  இதுதொடர்பாக காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன், டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் மேலிடம் முடிவு

  கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு மாநிலங்களவை தேர்தலில் கர்நாடகத்தில் இருந்து பிரியங்கா காந்தி தேர்வு செய்யப்பட்டால் உதவியாக இருக்கும் என்று டி.கே.சிவக்குமார் கருதுவதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கூட்டத்தில் மூத்த தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் டி.கே.சிவக்குமார் திட்டமிட்டுள்ளார்.

  கர்நாடகத்தில் இருந்து பிரியங்கா காந்தி மாநிலங்களவை உறுப்பினராக தோ்வு செய்யப்படுவாரா? என்பது பற்றி காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு செய்ய உள்ளது.

மேலும் செய்திகள்