வீட்டின் கதவை உடைத்து நகையை திருடிய வாலிபர் கைது

மதுரையில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 12½ பவுன் நகையை திருடி வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-14 20:56 GMT
மதுரை
மதுரையில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 12½ பவுன் நகையை திருடி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நகை திருட்டு
மதுரை மதிச்சியம் சப்பானி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பாண்டிசெல்வி (வயது 28). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த 12½ பவுன் தங்க நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
அவர் இது குறித்து மதிச்சியம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் மதிச்சியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாரி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
வாலிபர் கைது
அவர்கள் சம்பவ பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் பாண்டிச்செல்வி வீட்டுக்குள் நுழைவது தெரியவந்தது. போலீசார் அந்த காட்சியின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அதில் மதிச்சியம் வைகை வடகரையை சேர்ந்த அய்யனார்(32) என்பது தெரியவந்தது.
உடனே போலீசார் அவரது வீட்டிற்கு சென்று அங்கு பதுங்கியிருந்த அய்யனாரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 12½ பவுன் நகைகள் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பாராட்டினார்.

மேலும் செய்திகள்