தஞ்சையில் 1 கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை

வரத்து குறைவால் தஞ்சையில், தக்காளி விலை அதிகரித்துள்ளது. 1 கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-05-14 20:16 GMT
தஞ்சாவூ்ா:
வரத்து குறைவால் தஞ்சையில், தக்காளி விலை அதிகரித்துள்ளது. 1 கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தக்காளி விலை அதிகரிப்பு
தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் காவிரி நகர் அருகே தற்காலிக காமராஜர் மார்க்கெட் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, மராட்டியும், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதேபோல் தஞ்சையில் இருந்தும் வெளியூர்களுக்கு காய்கறிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். 
ஓசூர், தளிக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் தக்காளி தஞ்சைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தினமும் 3 ஆயிரம் பெட்டிகளில் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் வரத்து குறைந்த காரணத்தால் கடந்த சில நாட்களாக தஞ்சையில் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. 
இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தற்காலிக மார்க்கெட்டில் கடந்த வாரம் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலையை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த இல்லத்தரசிகள் தக்காளியை வழக்கமாக வாங்கும் அளவை காட்டிலும் குறைந்த அளவே வாங்கி சென்றனர். இதேபோல் உணவகங்களுக்கு காய்கறி வாங்குபவர்களும் தக்காளியை குறைந்த அளவே வாங்கி சென்றனர். 
இதேபோல் முருங்கைக்காய், பீன்ஸ், அவரைக்காய் ஆகியவற்றின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ரூ.60-க்கு விற்ற முருங்கைக்காய் நேற்று ரூ.80-க்கும், ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் மற்றும் அவரைக்காய் ரூ.90-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 
விளைச்சல் குறைவால் விலை உயர்வு 
இதுகுறித்து காய்கறி வியாபாரி ஒருவர் கூறுகையில், தஞ்சைக்கு வழக்கத்தை விட தக்காளி வரத்து குறைந்துள்ளது. மேலும் தக்காளியின் விளைச்சலும் குறைவாக இருப்பதால் விலை உயர்ந்து இருக்கிறது. காய்கறி வாங்க வருபவர்கள் தக்காளியின் விலையை கேட்டு சற்று யோசித்த பின்னரே குறைந்த அளவில் வாங்கி செல்கின்றனர். மற்ற காய்கறிகளை விட சமையலுக்கு தக்காளி முக்கியமானது என்பதால் எப்போதும் கிலோ கணக்கில் வாங்குபவர்கள், தக்காளியை தவிர்க்க முடியாமல் ½ கிலோ, ¼ கிலோ என்று சில்லறை கணக்கில் வாங்கி சென்றனர். தக்காளியின் விலை அதிகரித்து காணப்பட்டாலும், மற்ற காய்கறிகள் விலை குறைவாகவே இருக்கிறது என்றார். நேற்று விற்பனையான மற்ற காய்கறிகளின் விலை விவரம்(ரூபாயில்) வருமாறு:-
பீட்ரூட்-40, கேரட்-45, பாகற்காய்-40, சவ்சவ்-30, முள்ளங்கி-30, உருளைக்கிழங்கு-30, வெண்டைக்காய்-50, முட்டைக்கோஸ்-40, கத்தரிக்காய்-30, புடலங்காய்-45, சின்ன வெங்காயம்-25, பொடி பல்லாரி -20, பெரிய பல்லாரி-30.

மேலும் செய்திகள்