விசைப்படகுகள் 25, 26-ந் தேதிகளில் நேரடி ஆய்வு

விசைப்படகுகள் வருகிற 25, 26-ந் தேதிகளில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதால் மீனவர்கள் அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-14 19:52 GMT
தஞ்சாவூர்:
விசைப்படகுகள் வருகிற 25, 26-ந் தேதிகளில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதால் மீனவர்கள் அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆய்வு
தமிழ்நாடு கடல்சார் மீன்பிடித்தலை ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகுகள் அனைத்தும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையரால் நியமிக்கப்படும் பணியாளர்களை கொண்டு ஆண்டுக்கு ஒரு முறை நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டிற்கான மீன்பிடி தடைக்காலத்தில் தமிழகத்தில் இயங்கும் அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளை (பதிவு செய்யப்பட்டவை மற்றும் பதிவு செய்யப்படாதவை) நேரடி ஆய்வு செய்யப்பட உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள மீன்பிடி கலன்களை வருகிற 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்யப்பட உள்ளது.
பதிவுச்சான்று
மேலும் ஆய்வு செய்யப்படும் நாளில் படகு உரிமையாளர்கள் படகுகளின் பதிவுச்சான்று, மீன்பிடி உரிமம், வரிவிலக்கு அளிக்கப்பட்ட டீசல் பாஸ்புத்தகம், துறை மூலம் வழங்கப்பட்ட தொலைத்தொடர்பு கருவிகள் ஆகியவைகளை தயார் நிலையில் வைத்திட வேண்டும். ஆய்வு செய்யும்நாளில் ஆய்வுக்குழுவிற்கு அனைத்து விவரங்களையும் விசைப்படகு உரிமையாளர்கள் அளித்திட வேண்டும்.
நேரடி ஆய்வின்போது காண்பிக்கப்படாத பதிவு செய்யப்படாத படகுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆய்வு நாள் அன்று படகினை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பின்னொரு நாளில்ஆய்வு செய்யக்கோரும் படகு உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்கப்படாது.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்