கார் கவிழ்ந்து நெல் வியாபாரி சாவு
மானூர் அருகே கார் கவிழ்ந்து நெல் வியாபாரி இறந்தார்.
மானூர்:
மானூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நெல் வியாபாரி இறந்தார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.
நெல் வியாபாரி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள தளவாய்புரம் செட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 42). நெல் வியாபாரி.
இவர் திருச்செந்தூர் அருகே உள்ள தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நேற்று முன்தினம் இரவு மனைவி மாரியம்மாள் (43), மகன்கள் பூவரசன் (18), விக்னேஷ் (15), மகள் கலையரசி (16) மற்றும் சின்னச்சாமியின் சகோதரியின் மகள்கள் ஐஸ்வர்யா, பொன் ரம்யா ஆகியோருடன் காரில் நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
மானூர் அருேக நெல்லை- சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் வந்தபோது ஒரு நாய் திடீரென குறுக்கே ஓடியது. இதனால் திடீரென பிரேக் போட்டதால் கார் நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இதில் மாரியம்மாள், பூவரசன், ஐஸ்வர்யா ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பரிதாப சாவு
காரை ஓட்டி வந்த சின்னசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த மானூர் போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சின்னச்சாமியின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.