இரு கோஷ்டியினர் மோதல் 7 பேர் மீது வழக்கு

ஜோலார்பேட்டை அருகே இரு கோஷ்டியினர் மோதலில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-05-14 19:36 GMT
ஜோலார்பேட்டை,


ஜோலார்பேட்டை அருகே இரு கோஷ்டியினர் மோதிக்கொண்டது தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டையை அடுத்த மூக்கனூர் அடியத்தூர் பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணன் (வயது 37) கடந்த 10 வருடத்துக்கு முன்பு 8 அடி அளவில் வழிவிட்டு வீடு கட்டியிருந்தார். இந்நிலையில் சத்தியநாராயணன் அந்த 8 அடி வழியில் தொட்டி கட்டிக் கொண்டிருந்தார்.

இதற்கு அந்த பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் எதிர்ப்பு தெரிவிக்கவே வாய் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த சங்கர், அவரது மனைவி நந்தினி, மகன் அரவிந்தன், உறவினர் தன்ராஜ் ஆகிய 4 பேரும் சத்தியநாராயணனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு மோட்டார்சைக்கிளில் உள்ள பம்பரை கழற்றி தாக்கினர். 

இதில் பலத்த காயமடைந்த சத்தியநாராயணன் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக சத்தியநாராயணன் கொடுத்த புகாரில் சங்கர் உள்பட 4 பேர் மீது ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர்கான் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
இதேபோல சங்கரை சத்தியநாராயணன், அவரது தந்தை ஜெயராமன் மற்றும் சென்னம்மாள் ஆகிய 3 பேரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சங்கரும் காயம் அடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் சத்தியநாராயணன் உள்பட 3 பேர் மீது ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இரு தரப்பிலும் மொத்தம் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்