காபிக்கடையில் திடீர் தீ விபத்து

திருச்சி தில்லைநகரில் உள்ள காபிக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-05-14 19:21 GMT
திருச்சி, மே.15-
திருச்சி தில்லைநகரில் உள்ள காபிக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
காபி கடையில் தீ விபத்து
திருச்சி தில்லைநகர் கே.டி. ஜங்ஷன் பகுதியில் சாலைரோட்டில் ஐங்கரன் பேக்கரி மற்றும் காபிக்கடை உள்ளது. இந்த கடையில் இருந்த கியாஸ் சிலிண்டர்களில் திடீர் கசிவு ஏற்பட்டு நேற்று மாலை தீப்பிடித்தது.
கடையின் முன்புறத்தில் பிடித்த தீ மள, மளவென பரவி கடைமுழுவதும் பற்றி எரிந்தது. இதனை கண்டு அருகில் நின்றவர்கள் ஓட்டம் பிடித்தனர். பின்னர் உடனடியாக இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து மேலும் தீயை பரவவிடாமல் தடுத்து அணைத்தனர்.
பொருட்கள் எரிந்து நாசம்
எனினும் இந்த விபத்தில்  கடையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தில்லைநகர் பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்