208 ஊராட்சிகளிலும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை

208 ஊராட்சி பகுதிகளிலும் குடிநீர் தங்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

Update: 2022-05-14 19:09 GMT
திருப்பத்தூர்

208 ஊராட்சி பகுதிகளிலும் குடிநீர் தங்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

ஆய்வுக்கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் செயல்படுத்தபடும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பண்ணை குட்டை அமைக்கும் பணிகளை வருகின்ற ஜூன் மாத்திற்கு முன்பாக முடிக்க வேண்டும். மேலும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள பணிகளை உடனடியாக நிறைவுசெய்ய வேண்டும். 

மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.34.84 கோடி மதிப்பில் 332 பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் 320 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும்.

மரக்கன்றுகள்

மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சி பகுதிகளிலும் குடிநீர் தங்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை வசதிகள் 2 அல்லது 3 மாதகாலத்திற்குள் நிறைவுசெய்ய வேண்டும். நிலுவையில் உள்ள தனிநபர் கழிப்பிடம், வீடுகள் ஆகிய பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும்.

மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் 62,510 மரக்கன்றுகளை வருகின்ற ஜூன் மாதத்திற்குள் நடவு செய்திருக்க வேண்டும். ஒரு லட்சம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து நடவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் நிலுவையிலுள்ள அங்கன்வாடி மையக்கட்டிடங்களின் பணிகளை விரைந்து கட்டி முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, செயற்பொறியாளர்.சுந்தரபாண்டியன், உதவி இயக்குனர் பிச்சாண்டி, உதவி திட்ட அலுவலர் செல்வன், உதவி செயற்பொறியாளர் மகேஷ்குமார் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்