தையல் எந்திரம் பழுது பார்ப்பவர் மீது தாக்குதல்
விருத்தாசலத்தில் தையல் எந்திரம் பழுது பார்ப்பவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் செந்தில்குமார் (வயது 45). விருத்தாசலம்-ஆலடி சாலையில் தையல் எந்திரம் பழுது பார்க்கும் கடை நடத்தி வரும் இவருக்கும், ராமச்சந்திரன் பேட்டையை சேர்ந்த சாலமன் மகன் அகஸ்டின்(28), செந்தில்குமார் மகன் லட்டு என்கிற திலீபன் ஆகியோருக்கும் இடையே சிகரெட் பிடிப்பது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செந்தில்குமார் அவரது கடையில் இருந்தபோது அங்கு வந்த அகஸ்டின், திலீபன் மற்றும் சிலர் சேர்ந்து செந்தில்குமாரை ஆபாசமாக திட்டி தாக்கினர். இருப்பினும் ஆத்திரம் அடங்காமல் அகஸ்டின், திலீபன் இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் செந்தில்குமார் மீது கிழித்து விட்டு, கட்டையால் அவரது தலையில் அடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
உறவினர்கள் முற்றுகை
இது குறித்து தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் படுகாயமடைந்த செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதையறிந்து வந்த செந்தில்குமாரின் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியை திடீரென முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினா்.
அப்போது குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டங்களில் ஈடுபடுவோம் என செந்தில்குமாரின் உறவினர்கள் கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் இது குறித்த புகாரின் பேரில் அகஸ்டின், திலீபன் மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.