சீறிப்பாய்ந்த மாட்டுவண்டிகள்
திருச்சுழி அருகே மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன.
காரியாபட்டி,
திருச்சுழி அருகே பரளச்சியை அடுத்த கீழப்பூலாங்கால் கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ரேக்ளா மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது. இதில் பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டிகளுக்கான போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றன. இந்த மாட்டு வண்டி பந்தயமானது கீழபூலாங்காலில் இருந்து தொடங்கி கீழ்க்குடி வழியாக துத்திநத்தம் வரை சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது. இதில் 6 பெரிய மாட்டு வண்டிகளும், 13 சிறிய மாட்டுவண்டிகளும் கலந்து கொண்டன. இந்த ரேக்ளா மாட்டுவண்டி பந்தயத்தில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. பந்தயத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசு ரூ.25 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.23 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.21 ஆயிரம் என வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை ஏராளமானோர் வேடிக்கை பார்த்தனர்.