கியாஸ் கசிவு ஏற்பட்டு தீவிபத்து; தொழிலாளி பலி
சின்ன தாராபுரம் அருகே கியாஸ் கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது. இதில், சிகிச்சை பலனின்றி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
க.பரமத்தி,
தீ விபத்து
கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம் அருகே உள்ள தும்பிவாடியை சேர்ந்தவர்கள் தவசிமணி (வயது 40) ஜெயராஜ் (வயது 47). இவர்கள் 2 பேரும் கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த மாதம் 27-ந்தேதி ஜெயராஜ் தவசிமணி வீட்டிற்கு சென்றார். அப்போது தவசிமணி கியாஸ் அடுப்பு மற்றும் சிலிண்டரை சுத்தம் செய்து உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கியாஸ் கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது.
இதில், உடலில் காயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் ஜெயராஜ் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தவசிமணி சிகிச்சை முடிந்து கடந்த வாரம் வீட்டுக்கு வந்துள்ளார்.
தொழிலாளி பலி
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தவசிமணிக்கு உடல்நிலை சரியில்லாததால் மீண்டும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தவசிமணி பரிதாபமாக இறந்தார். ஜெயராஜுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.