கரூர் அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில் தேரோட்டம்
கரூர் அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அமராவதி நதியில் தீர்த்தவாரி இன்று நடக்கிறது.
கரூர்,
சித்திரை திருவிழா
கரூர் மேட்டுத்தெருவில் பிரசித்தி பெற்ற அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து, தினமும் சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், வெள்ளி கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், கருட வாகனம், புஷ்பக விமானம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்றது. 12-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. காலை 6 மணியளவில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் ரெங்கநாதர் தேரில் எழுந்தருளினார். காலை 8 மணியளவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளில் ஆடி அசைந்தபடி வந்தது. அப்போது பக்தர்கள் சுவாமிக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமராவதி நதியில் தீர்த்தவாரியும், இரவு ரெங்கநாத சுவாமி கெஜலெட்சுமி வாகனத்திலும், கல்யாண வெங்கடரமண சுவாமி சேஷ வாகனத்திலும் எழுந்தருளுகிறார்கள். நாளை (திங்கட்கிழமை) ஆளும் பல்லாக்கும், 17-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும், 18-ந் தேதி ரெங்கநாத சுவாமியுடன் கல்யாண வெங்கடரமண சுவாமிக்கும் புஷ்பயாகமும் நடக்கிறது.