அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவையொட்டி அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவையொட்டி அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
சித்திரை வசந்த உற்சவம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஆண்டு தோறும் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவம் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. முன்னதாக 4-ந்தேதி கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து விழா நாட்களில் மண்டகப்படியும், மகிழமரம் அருகில் சாமிக்கு பொம்மை வடிவிலான சேடிப்பெண் பூப்போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தீர்த்தவாரி நிகழ்ச்சி
அதைத் தொடர்ந்து நேற்று சித்திரை வசந்த உற்சவம் நிறைவு விழாவையொட்டி பகல் 12.30 மணி அளவில் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், பராசக்தி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றியுள்ள மாட வீதியை வலம் வந்தனர். பின்னர் அய்யங்குளத்திற்கு மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
அய்யங்குளத்தில் உள்ள மண்டபத்தில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து அய்யங்குளத்தில் சூல ரூபத்திற்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மன்மத தகனம்
பின்னர் அய்யங்குளத்திற்கு எதிரில் உள்ள அருணகிரிநாதர் கோவிலில் சாமிக்கும், பராசக்தி அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து கோபால விநாயகர் கோவிலில் சாமிக்கு மண்டகப்படியும், இரவு 10 மணி அளவில் கோவில் கொடிமரம் அருகில் மன்மத தகனமும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் மற்றும் விழா குழுவினர் செய்தனர்.