மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
மயிலாடுதுறை வட்டாரத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குனா் சுப்பையன் விளக்கம் அளித்துள்ளார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை வட்டாரத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குனா் சுப்பையன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்காச்சோளம்
மயிலாடுதுறை வட்டாரத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக மாற்றுப் பயிராக மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது மக்காச்சோள பயிரானது, விதைப்பு நிலை முதல் அறுவடை நிலை வரை பல்வேறு நிலைகளில் உள்ளதால் விவசாயிகள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதன்படி, நிலத்தில் எக்டேருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கை மண்ணில் இட்டு, விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு கிலோ மக்காச்சோள விதைக்கு 10 கிராம் பவேரியா பேசியானா நுண்ணுயிர் பூச்சிக்கொல்லி அல்லது 10 கிராம் தயோமீதாக்சம், 30 சதவீதம் எப்.எஸ். அல்லது 6 மி.லி. சயான்டிரினிபுரால் 19.8 சதவீதம் மற்றும் தயோமீதாக்சம் 19.8 சதவீதம் எப்.எஸ். கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதன்மூலம் புழுக்கள் அதன் இளம் பருவத்திலேயே கட்டுப்படுத்தப்படும் என்பதால், இப்பூச்சியின் தாக்குதலை 15-20 நாட்கள் வரை பரவாமல் தடுக்க இயலும்.
படைப்புழுவின் தாக்குதல்
மேலும், இறவை பயிருக்கு வரிசைக்கு வரிசை 60 செ.மீட்டரும், பயிருக்கு பயிர் 25 செ.மீட்டரும், மானாவாரி பயிருக்கு வரிசைக்கு வரிசை 45 செ.மீட்டரும், பயிருக்கு பயிர் 20 செ.மீட்டரும் இடைவெளி பராமரிப்பது மிகவும் அவசியமாகும். 10 வரிசைக்கு ஒரு வரிசை 75 செ.மீ இடைவெளி விட வேண்டும். தட்டைப்பயறு, சூரியகாந்தி, எள், சோளம், சாமந்தி பயிர்களை வரப்புப் பயிராகவும், உளுந்து, பாசிப்பயறு வகைப் பயிர்களை ஊடு பயிராகவும் பயிரிட்டால், படைப்புழுவின் தாக்குதலை எளிதில் கண்டறிய முடியும்.
இனக்கவர்ச்சிப் பொறிகள் எக்ேடருக்கு 12 எண்கள் வைத்து பூச்சி நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். முட்டைக் குவியல்கள் மற்றும் இளம் புழுக்களை கைகளால் சேகரித்தும் அழிக்கலாம்.
வயல்களில் 5 சதவீதத்திற்கு மேல் படைப்புழு தாக்குதல் தெரிய வந்தால், வேம்பு சார்ந்த தாவரப் பூச்சிக்கொல்லியான அசாடிராக்டின் 1,500 பி.பி.எம். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம் அல்லது 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசல் தெளிக்கலாம். தாக்குதல் 10 சதவீதத்தை தாண்டும் பட்சத்தில், ஏக்கருக்கு 1 கிலோ வீதம் மெட்டாரைசியம் அனிசோபிலே அல்லது பவேரியா பாசியானா என்ற உயிரி பூச்சிக்கொல்லியை தெளிக்கலாம். தேவை ஏற்பட்டால், பரிந்துரைக்கப்படும் ரசாயன பூச்சி கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒன்றினை வேளாண்மை துறை அலுவலர்களின் அறிவுரையின்படி தெளிக்கலாம். ரசாயன உரங்களை பயன்படுத்தக்கூடாது.
நல்ல விளைச்சல்
தொடர்ந்து ஒரே பூச்சிக்கொல்லி மருந்தினை தெளிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு தேவையான பவேரியா, மெட்டாரைசியம் போன்ற உயிரி பூச்சிக்கொல்லிகள் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை தவறாது பின்பற்றி நடப்பு ஆண்டில் படைப்புழு தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்தி மக்காச்சோளப்பயிரில் நல்ல விளைச்சல் எடுக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.