இடி, மின்னலுடன் பலத்த மழை
சேலத்தில் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சேலம்:
சேலத்தில் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பலத்த மழை
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் கோடை வெப்பம் தணிந்து கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சேலம் மாநகரில் நேற்று முன்தினம் விடிய, விடிய சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. ஏற்காட்டில் மட்டும் 79 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
இந்தநிலையில், சேலத்தில் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. பின்னர் மாலையில் கருமேக கூட்டங்கள் திரண்டதை அடுத்து மாலை 6.30 மணியளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. சூரமங்கலம், அழகாபுரம், அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, பெரமனூர், புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், குகை, சீலநாயக்கன்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, நெத்திமேடு உள்பட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.
வாகன ஓட்டிகள் அவதி
இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை முடிந்து வீடுகளுக்கு சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். அவர்கள் மழையில் நனைந்தவாறு தங்களின் வீடுகளுக்கு சென்றதை காணமுடிந்தது. அதேபோல் சாலையோரம் இரவு நேர டிபன் கடைகளில் வியாபாரம் பாதித்தது. இந்த மழையால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சேலத்தில் பெய்த மழையால் இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியதால் இதமான சீதோஷ்ணநிலை காணப்பட்டது.
---