மர்ம சாவில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி அடித்துக்கொலை டிரைவருடன் பெண் கைது

தர்மபுரியில் தொழிலாளி கள்ளக்காதல் விவகாரத்தில் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக கள்ளக்காதலி மற்றும் டிரைவரை தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-05-14 17:24 GMT
தர்மபுரி:
தர்மபுரியில் தொழிலாளி கள்ளக்காதல் விவகாரத்தில் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக கள்ளக்காதலி மற்றும் டிரைவரை தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழிலாளி
தர்மபுரி அருகே உள்ள மாட்டுக்காரனூர் பிரிவு ரோடு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடந்த 11-ந்தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது இறந்து கிடந்தவர் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பூகானஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மைக்செட் தொழிலாளி மாது (வயது 45) என தெரியவந்தது. 
பிரேத பரிசோதனையின் போது அவருடைய உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து தீவிர விசாரணையை தொடங்கிய போலீசார் மாது இறந்து கிடந்த பகுதியின் அருகே சாலை மற்றும் தெருக்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். 
தனியார் பள்ளி ஆயா
அப்போது மாதுவை கடந்த 9-ந்தேதி நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் அமர வைத்தநிலையில் ஒரு ஆணும், பெண்ணும் கொண்டு சென்றது தெரியவந்தது. இதை வைத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது தொழிலாளி மர்ம சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. 
அதன் விவரம் வருமாறு:-
மைக் செட் தொழிலாளியான மாதுவுக்கு தர்மபுரியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான சித்ரா (35) என்பவருடன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால் சித்ராவும், மாதுவும் நெருங்கி பழகி உள்ளனர். சித்ரா தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆயாவாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 
இரும்பு கம்பியால் தாக்குதல்
இந்த நிலையில் சித்ராவிற்கு நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த டிரைவரான கிருஷ்ணன் (50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது. இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் குறித்து தகவல் அறிந்த மாது, சித்ராவிடம் இதுதொடர்பாக தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி சித்ரா, கிருஷ்ணனிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து சம்பவத்தன்று சித்ராவின் வீட்டிற்கு வந்த மாதுவிடம் இனிமேல் சித்ராவை சந்திப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணன் எச்சரித்துள்ளார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கிருஷ்ணன், சித்ரா ஆகிய 2 பேரும் இரும்பு கம்பியால் மாதுவின் தலையில் அடித்து உள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்து உள்ளார்.
2 பேர் கைது
இதையடுத்து மாதுவின் உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து 2 பேரும் எடுத்து சென்று புதரில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சித்ரா, கிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். 
கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்