நாமக்கல்லில் கார் டிரைவர் கொலையில் 3 பேர் கைது

நாமக்கல்லில் கார் டிரைவர் கொலையில் 3 பேர் கைது

Update: 2022-05-14 16:57 GMT
நாமக்கல்:
நாமக்கல்லில் கார் டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் டிரைவர் குத்திக்கொலை
நாமக்கல் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 29). கார் டிரைவர். இவருடைய சகோதரி மகன் நாமக்கல் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் சரியாக படிக்காததால், பிரபாகரன் அவனை கண்டித்து உள்ளார். அப்போது அங்கிருந்த பிரபாகரனின் நண்பர் மைத்தான் என்கிற சுரேந்தர் (27) இதை தட்டி கேட்டு உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்லப்பா காலனியில் உள்ள கோவில் அருகில் பிரபாகரன் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சுரேந்தருக்கும், பிரபாகரனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறின் போது மேதரமா தேவியை சேர்ந்த விக்னேஷ் (29) சுரேந்தருக்கு ஆதரவாக பேசி உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் கத்தியால் விக்னேசை குத்தி உள்ளார். இதில் அவர் குடல் சரிந்து மயங்கி விழுந்தார்.
இதையடுத்து பிரபாகரன் அருகில் உள்ள ஒரு வீட்டில் சென்று பதுங்கி கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற சுரேந்தர் மற்றும் சிலர் பிரபாகரனை வெளியே இழுத்து வந்து சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் 17 இடங்களில் கத்திக்குத்து விழுந்ததில் படுகாயம் அடைந்த பிரபாகரன் பரிதாபமாக இறந்தார்.
3 பேர் கைது
தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி மற்றும் போலீசார் பிரபாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக துப்பு துலக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தனிப்படை போலீசார் சுரேந்தர் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சுரேந்தர், அவருடைய நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி (23), சபீன் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்