சேதமடைந்த மின்கம்பம் அகற்றப்படுமா?
திருப்பூண்டியில் சேதமடைந்த மின்கம்பம் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.;
வேளாங்கண்ணி:
திருப்பூண்டியில் சேதமடைந்த மின்கம்பம் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சேதமடைந்த மின்கம்பம்
கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி மூலக்கடைதெருவில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின் கம்பத்தில் 20-க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பகுதி போக்குவரத்து நெரிசல் நிறைந்த இடமாக உள்ளது.
அருகில் பஸ் நிறுத்தம் உள்ளதால் அனைத்து பகுதி மக்களும் அங்கு வந்து பஸ்சில் ஏறி வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். மேற்கண்ட மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது.
அகற்ற வேண்டும்
இந்த மின்கம்பத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
வேகமாக காற்று வீசினால் மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும் விபத்து ஏற்படும் முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.