சர்க்கரை ஆலைக்கு அனுப்பப்பட்ட கரும்புக்கான தொகையை உடனடியாக வழங்க வேண்டும்
சர்க்கரை ஆலைக்கு அனுப்பப்பட்ட கரும்புக்கான தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1 உள்ளது. இந்த ஆலைக்கு சவேரியார்பாளையம், மைக்கேல்புரம், ஈருடையாம்பட்டு, அருளம்பாடி, வடபொன்பரப்பி, பிரம்மகுண்டம், பாக்கம், கடுவனூர், கானாங்காடு, அரும்பராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது நிலத்தில் பயிரிடப்படும் கரும்புகளை அறுவடை செய்து அனுப்பி வைத்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆலைக்கு அனுப்பப்பட்ட கரும்புக்கு தற்போது வரை அதற்குரிய தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மூங்கில்துறைப்பட்டில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்ட கரும்புக்கு தற்போது வரை அதற்கு உண்டான தொகை வரவில்லை. இதுகுறித்து ஆலை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டால் வங்கிக்குச் சென்று பணம் வந்திருக்கிறதா என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என கூறுகின்றனர். வங்கிக்கு சென்று கேட்டால், ஆலை நிர்வாகம் உங்களுக்கு இன்னும் பணம் அனுப்பவில்லை என்று தெரிவிக்கின்றனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட ஆலை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கரும்புக்கான தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றனர்.