கர்நாடகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த ஏழை குடும்பத்தினருக்கு 75 யூனிட் இலவச மின்சாரம்
கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த ஏழை குடும்பத்தினருக்கு 75 யூனிட் இலவச மின்சாரத்தை நிபந்தனைகளுடன் வழங்க மின்வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெங்களூரு: கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த ஏழை குடும்பத்தினருக்கு 75 யூனிட் இலவச மின்சாரத்தை நிபந்தனைகளுடன் வழங்க மின்வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
75 யூனிட் இலவச மின்சாரம்
கர்நாடகத்தில் எஸ்.சி மற்றும் எஸ்.டி. ஆகிய தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த 1.46 கோடி குடும்பங்கள் உள்ளன. இவற்றில் 39 லட்சத்து 26 ஆயிரத்து 65 குடும்பத்தினா் ஏழ்மை நிலையில் உள்ளனர். இந்த நிலையில், ஏழ்மை நிலையில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. குடும்பத்தினர் மாதத்திற்கு 75 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பயன்படுத்தி கொள்ள மின் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு கிராமப்புறங்களில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. சமூகங்களை சேர்ந்த ஏழ்மை குடும்பத்தினருக்கு 40 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த மாதம்(ஏப்ரல்) 5-ந் தேதி பாபு ஜெகஜீவன்ராம் ஜெயந்தி அன்றும், கடந்த மாதம் 14-ந் தேதி அம்பேத்கர் ஜெயந்தியின் போதும் கர்நாடகத்தில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. சமூகங்களை சேர்ந்த குடும்பத்தினருக்கு 75 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார்.
1-ந் தேதியில் இருந்து அமல்
ஆனால் முதல்-மந்திரி அறிவித்திருந்தாலும், இந்த இலவச மின்சாரம் பயன்படுத்துவதை மின்வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் அந்த சமூகங்களை சேர்ந்தவர்கள் 75 யூனிட் மின்சாரத்தை தங்களது வீடுகளில் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், இந்த திட்டம் கடந்த 1-ந் தேதியில் இருந்தே அமலுக்கு வருவதாகவும் மின்வாரியம் அறிவித்துள்ளது. இதனை மின்சாரத்துறை மந்திரி சுனில்குமாரும் அறிவித்துள்ளார்.
இந்த இலவச மின்சாரத்தால் மின்வாரியத்திற்கு ரூ.979 கோடி கூடுதல் செலவாகும். கிராமப்புறங்களில் வசிக்கும் எஸ்.சி, எஸ்.டி. சமூகங்களை சேர்ந்த ஏழை குடும்பத்தினர் தங்களது வீட்டில் 75 யூனிட்டுக்கு உள்ளே மின்சாரத்தை பயன்படுத்தினால் மட்டுமே இலவசமாகும். 75 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால், அந்த குடும்பத்தினர் எத்தனை யூனிட் பயன்படுத்தி உள்ளார்களோ, அதற்கான மொத்த கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளையும் மின்வாரியம் பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.