2,768 விவசாயிகளுக்கு ரூ.19 கோடி மானியம்
நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் 2,768 விவசாயிகளுக்கு ரூ.19 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.;
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் பசுமை புரட்சியை ஏற்படுத்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகளின் மூலம் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் வரும் துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு, டீசல் பம்பு செட், மின் மோட்டார்கள், நீர் கடத்தும் குழாய்கள் மற்றும் நீர் தேக்கத் தொட்டிகள் அமைக்க 50 சதவீதம் மானியத்தில் வேளாண் சார்ந்த பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.
தேனி மாவட்டத்தில் 8 வட்டாரங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2021-22-ம் நிதியாண்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 1,069 விவசாயிகளுக்கு ரூ.3 கோடியே 69 லட்சத்து 17 ஆயிரமும், தோட்டக்கலைத்துறை சார்பில் 1,069 விவசாயிகளுக்கு ரூ.14 கோடியே 55 லட்சமும் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறை சார்பில் 358 விவசாயிகளுக்கு ரூ.27 லட்சத்து 20 ஆயிரமும், தோட்டக்கலைத்துறை சார்பில் 272 விவசாயிகளுக்கு ரூ.58 லட்சத்து 7 ஆயிரமும் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 768 விவசாயிகளுக்கு ரூ.19 கோடியே 9 லட்சத்து 44 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.