அற்பிசம்பாளையம் திரவுபதியம்மன் கோவில் தேரோட்டம்

அற்பிசம்பாளையம் திரவுபதியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-14 16:27 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே அற்பிசம்பாளையம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.


அதுபோல் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 3-ந் தேதி சாகை வார்த்தல், காப்பு கட்டுதல், கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, 4-ந் தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்தலும், 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ஒவ்வொரு நாள் இரவிலும் சாமி திருவீதி உலாவும் நடந்தது.


இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் காலை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு மலர் அலங்காரத்தில் திரவுபதியம்மன், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்துச்சென்றனர். இந்த தேர், அற்பிசம்பாளையம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.


அதன் பின்னர் மாலையில் தீமிதி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பயபக்தியுடன் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, நேற்று மாலை மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

மேலும் செய்திகள்