மேலும் ஒருவர் கைது

கூட்டுறவு சங்க செயலாளரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-14 18:30 GMT
நாகூர்:
 நாகூர் பாலையூர் சிவன் மேலவீதியை சேர்ந்த சந்திரசேகரன் (வயது55).இவர் நாகூர் பாலையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக உள்ளார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி இரவு வேலையை முடித்து விட்டு  மோட்டார் சைக்கிளில் நாகூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், சந்திரசேகரனை வழிமறித்து அவரிடம்  இருந்த ரூ.15 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு அவரை தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  வழிப்பறியில் ஈடுபட்ட  வெளிப்பாளையம் வ.உ.சி. தெருவை சேர்ந்த முனியாண்டி மகன்  கார்த்திகேயன்(28) என்பவரை கைது செய்தன்ா. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய  நாகை தாமரைக்குளம் தென்கரை பகுதியை சேர்ந்த அபிலாஷ் (39) என்பவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகூர் போலீசார் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்தனர். இதில்  உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பது தெரிய வந்தது. பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அவர்,கூட்டுறவு சங்க செயலாளர் சந்திரசேகரனிடம் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற அபிலாஷ் என்பது தெரிய வந்தது. பின்னர் அபிலாசை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்