பழனியில் பாழாகி கிடக்கும் வரதமாநதி அணை பூங்கா
பழனியில் வரதமாநதி அணை பூங்கா பாழாகி கிடக்கிறது.
பழனி:
பழனி அருகே வரதமாநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையை பார்வையிட வாரவிடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுவட்டார மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து பொழுதை கழிக்கின்றனர்.
இந்நிலையில் சுற்றுலா பயணிகள், பக்தர்களுடன் வரும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சமாக வரதமாநதி அணை பகுதியில் பூங்கா உள்ளது. அங்கு சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், மான், சிங்கம் போன்ற மிருகங்களின் உருவங்கள், இருக்கைகள், நீரூற்று போன்றவை உள்ளன. ஆனால் போதிய பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் இந்த பூங்கா புதர்மண்டிய நிலையில் காட்சி தருகிறது.
குறிப்பாக சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகளை சுற்றிலும் புதர்கள் வளர்ந்துள்ளதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள், பக்தர்கள் கூறுகையில், பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நகர் பகுதியில் எந்தவித சுற்றுலா வசதிகளும் இல்லாததால் வரதமாநதி அணை பகுதிக்கு சென்று பார்வையிடுகின்றனர்.
ஆனால் வரதமாநதி அணை பகுதியில் உள்ள பூங்காவில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், பெரும் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.