ஐக்கிய அரபு அமீரக அதிபர் மரணம்: துணை ஜனாதிபதியின் ஊட்டி பயணம் ஒரு நாள் தள்ளிவைப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் காலமானதை தொடர்ந்து துணை ஜனாதிபதியின் ஊட்டி பயணம் ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.;
ஊட்டி
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் காலமானதை தொடர்ந்து துணை ஜனாதிபதியின் ஊட்டி பயணம் ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
துணை ஜனாதிபதி வருகை
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வெலிங்டன் ராணுவ கல்லூரி மற்றும் ஊட்டி லாரன்ஸ் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசுகிறார். அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவியும் கலந்து கொள்கிறார்.
இதற்காக அவர் டெல்லியில் இருந்து கோவைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டா் மூலம் வந்து குன்னூர் மற்றும் ஊட்டியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதிபர் மரணம்
இந்தநிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக இருந்து வரும் ஷேக் கலீபா பின் ஷயத் அல் நயான் உடல் நலக்குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து அதிபரின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இரங்கல் தெரிவிக்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.
இதனால் துணை ஜனாதிபதியின் ஊட்டி வருகை பயணம் ஒரு நாள் 16-ந்தேதி (திங்கட்கிழமை) தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதன்படி துபாயில் இருந்து நேரடியாக கோவைக்கு விமானம் மூலம் வரும் துணை ஜனாதிபதி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வருகிறார்.
அங்கு வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, பின்னர் ஊட்டியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதையடுத்து 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 19-ந் தேதி வரை ஊட்டியில் இருக்கும் துணை ஜனாதிபதி 20-ந் தேதி காலை இங்கிருந்து புறப்பட்டு டெல்லிக்கு செல்கிறார்.