போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற தமிழக வாலிபர் சுட்டுப்பிடிப்பு
இளம்பெண் மீது திராவகம் வீசிய வழக்கில் கைதான வாலிபர் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்டு உள்ளார்.
பெங்களூரு:
இளம்பெண் மீது திராவகம் வீச்சு
பெங்களூரு ஹெக்கனஹள்ளி கிராஸ் பகுதியில் 25 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் சுங்கதகட்டேயில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்தார். இந்த நிலையில் இளம்பெண்ணை அவரது பெரியம்மா வீட்டில் வாடகைக்கு வசித்த நாகேஷ்(வயது 29) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தனது காதலை இளம்பெண்ணிடம் நாகேஷ் வெளிப்படுத்திய போது நாகேசின் காதலை ஏற்க இளம்பெண் மறுத்து விட்டார்.
இந்த நிலையில் கடந்த மாதம்(ஏப்ரல்) 28-ந் தேதி தனியார் நிதி நிறுவனத்தின் நுழைவுவாயில் பகுதியில் வைத்து இளம்பெண் மீது நாகேஷ் திராவகம் வீசிவிட்டு தப்பி சென்றார். இதுகுறித்து காமாட்சிபாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த நாகேசை கைது செய்த மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் எம்.பட்டீல் தலைமையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது.
போலீஸ்காரர் மீது தாக்குதல்
இந்த நிலையில் தனிப்படை போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையால் நேற்று முன்தினம் தமிழ்நாடு திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கி இருந்த நாகேஷ் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நாகேசை தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு போலீசார் ஜீப்பில் அழைத்து வந்தனர். ஜீப் பெங்களூரு அருகே வந்தபோது நாகேஷ் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனாலும் போலீசார் ஜீப்பை நிறுத்தவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் நைஸ் ரோட்டில் உள்ள கெங்கேரி மேம்பாலம் பகுதியில் ஜீப் வந்தபோது நாகேஷ் மீண்டும் போலீசாரிடம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் போலீசார் ஜீப்பை நிறுத்தி உள்ளனர். நாகேசை சிறுநீர் கழிக்க வைக்க போலீஸ்காரரான மகாதேவய்யா என்பவர் அழைத்து சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் அங்கு கிடந்த ஒரு கல்லை எடுத்து போலீஸ்காரர் மகாதேவய்யாவை தாக்கிவிட்டு நாகேஷ் தப்பி ஓடியுள்ளார்.
துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காமாட்சிபாளையா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிரசாந்த் வானத்தை நோக்கி துப்பாக்கியால் ஒரு ரவுண்டு சுட்டு சரண் அடைந்து விடும்படி நாகேசுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார். ஆனாலும் நாகேசை சரண் அடைய மறுத்து புதருக்குள் குதித்து தப்பி ஓட முயற்சித்து உள்ளார். இதனால் இன்ஸ்பெக்டர் பிரசாந்த், நாகேசை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் நாகேசின் வலது காலில் குண்டு பாய்ந்தது.
இதில் சுருண்டு விழுந்த நாகேசை போலீசார் கைது செய்து சிகிச்சைக்காக ஆர்.ஆர்.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் கெங்கேரியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதுபோல நாகேஷ் கல்லால் தாக்கியதில் காயம் அடைந்த போலீஸ்காரர் மகாதேவய்யாவும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பரபரப்பு
இந்த சம்பவம் குறித்து காமாட்சிபாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பி ஓடியதால் பாதுகாப்பு நடவடிக்கையாக நாகேசை துப்பாக்கியால் சுட்டதாக இன்ஸ்பெக்டர் பிரசாந்த் கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை நாகேஷ் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட இடத்திற்கு தடய அறிவியல் அதிகாரிகள் சென்றனர்.
அங்கு கிடந்த துப்பாக்கி குண்டுகளையும், நாகேசின் ரத்தத்தையும் அதிகாரிகள் சேகரித்து கொண்டு அதை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இளம்பெண் மீது திராவகம் வீசிய வாலிபர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.