முருகபவனம் கிடங்கில் குவிந்துள்ள குப்பைகள் விரைவில் அகற்றப்படும் நகராட்சி நிர்வாக இயக்குனர் தகவல்
திண்டுக்கல் முருகபவனம் கிடங்கில் குவிந்துள்ள குப்பைகள் விரைவில் அகற்றப்படும் என்று நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா தெரிவித்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி வளர்ச்சி திட்ட பணிகள், சுகாதார பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. இதற்கு நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா தலைமை தாங்கினார். கலெக்டர் விசாகன், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் நகராட்சி நிர்வாக இயக்குனர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் ரூ.10 கோடியில் வாரச்சந்தை கட்டும் பணிகள், ரூ.38 லட்சத்தில் லெப்பை குளத்தை புனரமைக்கும் பணிகள், மாநகராட்சி கென்னடி தொடக்கப்பள்ளியில் ரூ.25 லட்சத்தில் நகர்நல மையம் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முருகபவனம் குப்பை கிடங்கில் குவிந்து கிடக்கும் குப்பைகள் விரைவில் அகற்றப்படும்.
மாநகராட்சி பகுதியில் தேங்கும் குப்பைகளை தரம் பிரித்து உரமாக மாற்றும் மையங்கள் திண்டுக்கல்லில் 10 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதுதவிர மேலும் 10 இடங்களில் கூடுதலாக குப்பைகள் தரம் பிரிக்கும் மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக முருகபவனம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கை நகராட்சி நிர்வாக இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நாகல்நகர் வாரச்சந்தை கட்டுமான பணிகள், லெப்பை குளம் புனரமைக்கும் பணிகள் ஆகியவற்றையும் பார்வையிட்டார். ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியம், பொறியாளர் முருகேசன், நகர்நல அலுவலர் காந்திமதி, கிழக்கு மண்டல குழுத்தலைவர் ஜான் பீட்டர் உள்பட பலர் உடன் இருந்தனர்.