மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு எடுப்பார்; மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பேட்டி
மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு எடுப்பார் என மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கூறினார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நடந்த பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்க மேலிட பொறுப்பாளர் அருண்சிங் வருகை தந்துள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள், கர்நாடக மேல்-சபை உறுப்பினர்கள் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் பா.ஜனதா தலைமை தேர்தல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கும்படி சிபாரிசு செய்யப்படும். இறுதியில் பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசித்து வேட்பாளர்கள் யார்? என்பது குறித்து அறிவிப்பார்கள்.
மந்திரிசபை விரிவாக்கம், மாற்றியமைப்பு குறித்து கேட்கிறீர்கள். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார். அதுபற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் அதிகமாகி விட்டது. காங்கிரஸ் தலைவர்கள் மோதிக் கொள்கிறார்கள். பா.ஜனதாவில் தலைவர்களுக்கு இடையே எந்த விதமான மோதலும் இல்லை.
இவ்வாறு அருண்சிங் கூறினார்.