தக்கலை அருகே துணிகரம் பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணிடம் நகை பறிப்பு
தக்கலை அருகே மோட்டார் சைக்கிளில் வந்து பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்மஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
தக்கலை,
தக்கலை அருகே மோட்டார் சைக்கிளில் வந்து பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்மஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பெண்ணிடம்...
தக்கலை அருகே உள்ள அப்பட்டுவிளை செம்மண்விளையில் வசித்து வருபவர் வறுவேல். இவருடைய மனைவி மேரி ரெத்தினம் (வயது 69). இவர் நேற்று காலை 6 மணிக்கு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் மருந்து வாங்க செல்வதற்காக அப்பட்டுவிளை பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். இதில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி மேரி ரெத்தினம் அருகே சென்று தக்கலைக்கு எப்படி போக வேண்டும்? என வழி கேட்டுள்ளார்.
நகை பறிப்பு
இந்த வழியாக செல்ல வேண்டும் என தெரிவித்த போது திடீரென அந்த நபர் மேரி ரெத்தினம் கழுத்தில் கிடந்த 3½ பவுன் நகையை பறித்தார்.
உடனே அவர் திருடன், திருடன் என சத்தம் போட்டார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நபர் ஏற்கனவே மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த வாலிபருடன் தப்பிச் சென்று விட்டார்.
இதுகுறித்து மேரி ரெத்தினம் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.