கழுத்தில் கத்திவைத்த நபரை கதிகலங்க வைத்த துணிச்சல் பெண்
கழுத்தில் கத்திவைத்த நபரை கதிகலங்க வைத்த துணிச்சல் பெண்;
கருமத்தம்பட்டி
சூலூரை அடுத்த பாப்பம்பட்டி பகுதியில் உள்ள வளர்மதி நகரில் வசித்து வருபவர் குருமூர்த்தி (வயது50). டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயா (37). சம்பவத்தன்று குருமூர்த்தி வழக்கம் போல் காலையில் கடைக்கு சென்றுள்ளார். வீட்டில் அவரது மனைவி ஜெயா மட்டும் தனியாக இருந்துள்ளார்.
அப்போது ஒருவர், ஜெயாவிடம் வந்து, தான் லாரி டிரைவர் என்றும், சரக்கு ஏற்றி வந்ததாகவும், சாப்பிடுவதற்கு உப்பு வேண்டும் எனகேட்டுள்ளார். உடனே ஜெயாவும், உப்பை எடுத்து தருவதற்காக ஜெயா வீட்டின் சமையல் அறைக்குள் சென்றுள்ளார்.
அப்போது அவரை பின் தொடர்ந்த டிரைவர், எதிர்பாராத விதமாக அவரிடம் நகையை பறிப்பதற்காக தான்மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெயாவின் கழுத்தில் வைத்து கத்தினால் கழுத்தை அறுத்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
ஆனால் ஜெயா பயப்படாமல் சுதாகரித்துக் கொண்டு துணிச்சலுடன் தனது ஒரு கையால் லாரி டிரைவரின் கத்தி இருந்த கையை பிடித்து கொண்டு மற்றொரு கையால் லாரி டிரைவரை தாக்கினார். இந்த தாக்குதலுடன் சேர்த்து சினிமா பாணியில் தனது கால்களால் உதைத்து தள்ளினார்.இதனால் கதி கலங்கிப்போய விழுந்த லாரி டிரைவர் தனது செல்போன், கத்தியை அங்கேயே போட்டுவிட்டு தலை தெறிக்க ஓட்டம் பிடித்தார்.
இது குறித்து ஜெயா தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே ஜெயாவின் கணவரும் அக்கம்,பக்கத்தில் இருந்தவர்களும் அந்த நபரை தேடியபோது, வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்ததுள்ளது.
சந்தேகமடைந்த அவர்கள் லாரியில் உள்ள செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு விசாரித்தனர். லாரியானது ராசிபுரத்தில் இருந்து பாப்பம்பட்டியில் உள்ள தனியார் கம்பெனிக்கு கோழி தீவனம் ஏற்றுவதற்காக அனுப்பி வைத்ததாக தெரிவித்தனர்.
லாரி டிரைவரின் பெயர் மாவீரன் என்பதும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் லாரியை எடுக்க யாரும் வராததால் இது குறித்து சூலூர் போலீஸ் நிலையத்தில் குருமூர்த்தி புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் லாரியை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய போது துணிச்சலுடன் லாரி டிரைவரை அடித்து துரத்திய பெண்ணை போலீசாரும் அப்பகுதி மக்களும் பாராட்டினர்.