சோழர்கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு
செய்யாறு அருகே சோழர்கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த பாலமுருகன், லோகேஷ்குமார், பழனிசாமி, நந்தகுமார் ஆகியோர் செய்யாறு அருகே உள்ள மடிப்பாக்கம் கிராமத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த கிராமத்தில் சிவன் கோவிலில் உள்ள பாறையில் சோழ அரசன் பார்த்திவேந்திர வர்மனின் 10-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டது.
இந்த கல்வெட்டில் பார்த்திவேந்திர வர்மனின் 3-வது ஆட்சி ஆண்டில் காழியூர் கோட்டத்தை சேர்ந்த காழியூர் நாட்டு மடிப்பாக்கத்து மகாதேவரான சிவனுக்கு 2 வேளையும் ஸ்ரீபலி பூஜை செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஸ்ரீபலி என்பது கோவிலை சுற்றி வந்து திக்குகளில் படையல் வைக்கும் போது தோல் கருவி கொண்டு இசைப்பதை குறிப்பிடுகிறது.
இந்த ஸ்ரீபலி ஏற்பாட்டினை தென்வீதி விடங்கனான வானவன் மாராயனேன் என்பவர் செய்ததாக குறிப்பிடுகிறது. இதில் குறிப்பிடப்படும் மாராயன் என்பது இசை வல்லுநர்களுக்கு வழங்கப்படும் பட்டம் என்றும், அக்கல்வெட்டு குறிப்பிடுவதாக கல்வெட்டு அறிஞர் சு. ராஜகோபால் தெரிவித்துள்ளார்.
மேலும் இக்கோவிலில் உள்ள மற்றொரு பாறைக்கல்வெட்டில் கோவிலுக்கு தொடர்ந்து வழிபாடு செய்ய நந்தவனம் ஏற்படுத்தப்பட்டு அதன் பராமரிப்பிற்காக நிலம் வழங்கப்பட்டது என்றும் குறிப்பிடுகிறது.
இக்கல்வெட்டு உடைந்த நிலையில் உள்ளதால் முழுவிவரம் அறியப்பெறவில்லை. இவ்விரு கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தர்மத்தை காப்பவர்கள் பாதத்தை தன் தலைமேல் வைத்து போற்றுவதாகவும் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க இக்கல்வெட்டுகளை பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.