மளிகை கடையில் எண்ணெய் திருடியவர் கைது
ஆலங்குளத்தில் மளிகை கடையில் எண்ணெய் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
ஆலங்குளம்:
ஆலங்குளத்தை சேர்ந்தவர் சுடலை முத்து. இவர் ஆலங்குளம் போலீஸ் நிலையம் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று முன்தினம் கூட்டம் அதிகமாக இருந்தது.
அப்போது, கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் கடைக்கு வெளியே வைத்திருந்த சமையல் எண்ணெய்யை பெட்டியுடன் திருடிச் சென்று தலையில் வைத்து ஓடினார். இதை அறிந்ததும் கடைக்காரர்கள் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் மளிகை கடையில் எண்ணெய் திருடியவர் நெல்லை பேட்டையை சேர்ந்த அரசன் என்ற சார்லஸ் (வயது 56) என்பது தெரியவந்தது. இவர் மீது ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கும், பேட்டை போலீஸ் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், சார்லசை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.