தடுப்பணை மதகை உடைத்த மர்மநபர்கள்

சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுளிப்பட்டி சங்கிலியான் கோவில் தடுப்பணை மதகை மர்ம நபர்கள் உடைத்து விட்டனர். இதையடுத்து தண்ணீர் வீணாக வெளியேறியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2022-05-14 11:42 GMT
கோபால்பட்டி:

சங்கிலியான் கோவில் தடுப்பணை

சாணார்பட்டி அருகே அஞ்சுகுளிப்பட்டியில் சிறுமலை அடிவாரத்தில் 20 அடி ஆழத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பில் சங்கிலியான் கோவில் தடுப்பணை உள்ளது. 10 ஆண்டுக்கு பிறகு கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையில் தடுப்பணையில் தண்ணீர் முழுவதும் நிரம்பி மறுகால் சென்றது. இந்த தடுப்பணையில் பாசனத்திற்காக 2 கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் தண்ணீர் திறந்து விட 2 மதகுகள் உள்ளன. எனினும் இந்த கால்வாய் மூலம் யாரும் விவசாயம் செய்யாததால் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது நடைமுறையில் இல்லை. ஆனால் அணையில் தண்ணீர் உள்ளதால் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இந்த தடுப்பணையில் மீன் குஞ்சுகள் வளர்க்கப்படுகிறது.

மதகு உடைப்பு
இந்நிலையில் தடுப்பணையில் இருந்த 2 மதகில் ஒரு மதகை யாரோ மர்மநபர்கள் உடைத்து விட்டனர். இதனால் இன்று காலை தண்ணீர் அதிகளவில் கால்வாயில் வீணாக வெளியேறியது. இதை பார்த்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து விவசாயிகள் ஒன்று சேர்ந்து தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் வெளியேறுவதை தடுத்தனர். எனினும் முழுவதுமாக அடைக்க முடியாததால் தண்ணீர் வெளியேறி கொண்டு உள்ளது. 
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடைக்கப்பட்ட மதகை சரி செய்து தண்ணீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அணையை தூர்வாரி நீர்பிடிப்பு பகுதியில் உள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும். அணையில் தொடர்ந்து பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்றனர். இதனிடையே மதகை உடைத்த மர்மநபர்கள் யார்? என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 


மேலும் செய்திகள்