ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக மோப்ப நாய் பிரிவுக்கு கூடுதலாக 2 நாய் குட்டிகள்

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக மோப்ப நாய் பிரிவுக்கு கூடுதலாக 2 நாய் குட்டிகள் சேர்க்கப்பட்டு உள்ளது.

Update: 2022-05-14 11:20 GMT
ஆவடி, 

புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் போலீஸ் மோப்ப நாய் பிரிவு சமீபத்தில் தொடங்கப்பட்டது. கொலை, திருட்டு போன்ற வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்வதிலும், வெடிபொருட்களை கண்டறிவதிலும், குற்ற விசாரணையிலும் மோப்ப நாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்காக சென்னை பெருநகர போலீஸ் துறையில் இருந்து ஆவடி மாநகர போலீஸ் கமிஷனரகத்துக்கு 3 மோப்ப நாய்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு அவை பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் கூடுதலாக ‘டாபர்மேன்’, ‘லாப்ரடோர்’ வகையை சேர்ந்த மேலும் 2 நாய் குட்டிகள் வாங்கப்பட்டு, அவைகள் ஆவடி போலீஸ் கமிஷனரக மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த நாய் குட்டிகளுக்கு ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ‘டாப்பி’, ‘பின்’ என பெயர் சூட்டினார். அப்போது கூடுதல் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் துணை கமிஷனர்கள் உமையாள், பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர். 4 மாத அடிப்படை பயிற்சிக்கு பிறகு குற்றச்சம்பவங்கள் தொடர்புடைய தனி பயிற்சிக்காக கோவை போலீஸ் கமிஷனரகத்துக்கு அவை அனுப்பி வைக்கப்படும்.

மேற்கண்டவாறு ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்