சேலம் ஜெயிலில் கைதி தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை

சேலம் ஜெயிலில் கைதி தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.;

Update: 2022-05-13 23:00 GMT
சேலம், 
தற்கொலை முயற்சி
சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 850-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 29). இவரை கடந்த ஆண்டு ஒரு திருட்டு வழக்கில் நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் இரவு மாரிமுத்து சிறையில் கொசுவர்த்தி சுருளை தண்ணீரில் கரைத்து குடித்துவிட்டார். பின்னர் மயங்கி கிடந்த அவரை சிறை வார்டன்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவத்தால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறையில் உள்ள மாரிமுத்துவை உறவினர்கள் யாரும் சந்திக்க வராததால் விரக்தியில் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
மேலும் அவருடைய தற்கொலை முயற்சிக்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்