எடப்பாடி அருகே சரக்கு வேன் கவிழ்ந்து 30 பேர் காயம் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது விபத்து
எடப்பாடி அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது சரக்கு வேன் கவிழ்ந்து 30 பேர் காயம் அடைந்தனர்.
எடப்பாடி,
வேன் கவிழ்ந்தது
எடப்பாடி அருகே உள்ள சித்தூர் சாவடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அப்புசாமி (வயது 58). இவருடைய தாயார் பழனியம்மாள் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் இறந்த பழனியம்மாளுக்கு அடையாள கல் நடும் துக்க நிகழ்ச்சிக்கு அப்புசாமி தனது உறவினர்கள் 28 பேரை அழைத்துக்கொண்டு திருச்செங்கோடு கோழிக்கால் நத்தம் பகுதிக்கு சரக்கு வேனில் சென்றார்.
வேனை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் துரைசாமி (29) என்பவர் ஓட்டினார். வேனில் அப்புசாமி, டிரைவர் துரைசாமி உள்பட 30 பேர் பயணம் செய்தனர்.அந்த வேன் எடப்பாடி அருகே சந்தனமில் பஸ் நிறுத்தம் பகுதியில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டில் கவிழ்ந்தது.
30 பேர் காயம்
இந்த விபத்தில் சரக்கு வேனில் வந்த 30 பேர் காயம் அடைந்தனர். உடனே அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் கவிழ்ந்த வேனை நிமிர்த்தி, காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து விபத்தில் படுகாயம் அடைந்த அம்மன் காட்டூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி (58), சென்னம்பட்டியை சேர்ந்த நாகராஜன் (50) ஆகிய 2 பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து எடப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.