விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்லவிலை கிடைக்க நடவடிக்கை; சபாநாயகர் அப்பாவு பேச்சு
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்லவிலை கிடைக்க நடவடிக்கை; சபாநாயகர் அப்பாவு பேச்சு
நெல்லை:
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நெல்லையில் நடந்த நெல் திருவிழாவில் சபாநாயகர் அப்பாவு பேசினார்.
நெல் திருவிழா
நெல்லை மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் மூலம் மாவட்ட அளவிலான கருத்தரங்கம் மற்றும் நெல் திருவிழா, பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் முன்னிலை வகித்தார். வேளாண்மை இணை இயக்குனர் கஜேந்திரன் வரவேற்று பேசினார்.
சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பாரம்பரிய நெல் ரகங்கள், பாரம்பரிய விதைகள், மூலிகை கண்காட்சி ஆகியவற்றை பார்வையிட்டு, நெல் திருவிழாவை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள், பாரம்பரிய நெல் விதைகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காணி இன மக்களின் விளைபொருட்கள்
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு பாரம்பரிய விவசாயத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் காணி இன மக்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளார். இதன் மூலம் காணி இன மக்கள் விளைவித்த பொருட்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் நெல்லை பொருநை நாகரிகமானது ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 3800 ஆண்டுகள் பழமையானது என்பதை சான்று மூலம் நிரூபித்துள்ளார். இதனால் கலெக்டருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். பொருநை நாகரிகத்தை உலகறியச் செய்ய முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
வேளாண்மைக்கு தனி பட்ஜெட்
நெல்தான் நமது நெல்லை நாகரிகத்தின் அடிப்படையாகும். அதன் அடிப்படையில்தான் நெல் திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. விவசாயிகளுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் வேளாண்மைக்கு என்று தனியாக பட்ஜெட் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகளுக்கு தேவையான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நெல் கொள்முதல் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவசாய கடன், விவசாயக்குழு கடன், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 13 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் வட்டியில்லாத கடன் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இலவச மின்சாரம்
விவசாயிகளின் உழைப்பால்தான் நாம் வாழ்கிறோம். இதை அனைவரும் உணர வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்கள் உற்பத்தி திறனை பெருக்க வேண்டும். மேலும் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் வழங்கப்பட்டது தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 லட்சம் பேருக்கு இந்த ஆண்டு இலவச மின்சாரம் வழங்கியுள்ளார்.
சூறாவளி காற்றால் பாதிக்கப்படுகின்ற வாழை விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து நான் ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தேன். அதிகாரிகள் மத்திய அரசு நிறுவனத்திற்கு எழுதி இன்சூரன்ஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
5 விதைகள்
கலெக்டர் விஷ்ணு பேசுகையில், ‘‘பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் விதைகள் இருந்தபோதிலும் 5 நெல் விதைகள்தான் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்த இயற்கை விவசாயம் தற்போது மக்கள் இயக்கமாக மாறி வருகிறது’’ என்றார்.
தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் பாரம்பரிய நெல் சாகுபடியாளர் பொண்ணு புதியவன், லட்சுமிதேவி, நம்மாழ்வார் மக்கள் குல விதை காப்பாளர்கள் மகேஸ்வரன், முருகன் ஆகியோர் இயற்கை விவசாயம் குறித்து பேசினார்கள்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் துணை மேயர் கே.ஆர்.ராஜு, முன்னாள் மேயர் விஜிலா சத்தியானந்த், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், வேளாண்மை துணை இயக்குனர்கள் பாலசுப்பிரமணியன், ராஜ்குமார், பாலகிருஷ்ணன், முருகானந்தம், ராஜ்குமார், பேராசிரியர்கள் ஜோதிமணி, ஜோசப், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுபாஷ் வாசுகி, விதைச்சான்று அங்கக சான்று உதவி இயக்குனர் ரெஜால்டா ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். வேளாண்மை துணை இயக்குனர் டேவிட் டென்னிசன் நன்றி கூறினார்.
விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நெல் கதிர் மாலை அணிவிக்கப்பட்டது. விழா மேடையானது பாரம்பரிய வேளாண் பொருட்களாலும், உபகரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.