இந்து முன்னணியினர் 2-வது நாளாக போராட்டம்
பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் திடீரென்று இறந்ததைக் கண்டித்து, இந்து முன்னணியினர் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் திடீரென்று இறந்ததைக் கண்டித்து, இந்து முன்னணியினர் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செவிலியர் திடீர் சாவு
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையைச் சேர்ந்தவர் சின்னதம்பி. இவர் இந்து முன்னணி நகர துணைத்தலைவராக உள்ளார். இவருடைய மனைவி முருகலட்சுமி, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் டாக்டர்களின் அஜாக்கிரதையால்தான் முருகலட்சுமி இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினார்கள்.
2-வது நாளாக போராட்டம்
மேலும் முருகலட்சுமியின் சாவுக்கு நீதி கேட்டு இந்து முன்னணியினர் அரசு ஆஸ்பத்திரி டீன் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக டீன் அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் மாநில செயலாளர் குற்றாலநாதன் ஆகியோர் தலைமையில் முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் விவேகானந்தன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முருகலட்சுமியின் சாவுக்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகலட்சுமியின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பேச்சுவார்த்தை தோல்வி
இதைத்தொடர்ந்து டீன் அலுவலகத்தில் டீன் ரவிச்சந்திரன், துணை முதல்வர் சாந்தாராம், டாக்டர் ராமசுப்பிரமணியன் மற்றும் உதவி போலீஸ் கமிஷனர் விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், இந்துமுன்னணி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து இந்து முன்னணியினர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முயற்சி செய்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்த போராட்டத்தின் போது நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. வந்து கலந்து கொண்டார். அவர் இந்த பிரச்சினையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண்பதாக கூறினார். இதையடுத்து இந்த போராட்டம் இன்றும் (சனிக்கிழமை) தொடரும் என்று இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.
80 பேர் கைது
இதற்கிடையே நேற்று மாலை கோரிக்கைகளை வலியுறுத்தி ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் அந்த அமைப்பினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்தும் குற்றாலநாதன் தலைமையில் ஆஸ்பத்திரி வளாகத்தில் சிலர் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அம்பையில் அக்கட்சியினர் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்பை பூக்கடை பஜாரில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் நாகராஜ், மாரியப்பன் உள்ளிட்ட 11 பேரை அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் கைது செய்தார்.