1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை மாணவ- மாணவிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியது

1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையான மாணவ- மாணவிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியது.

Update: 2022-05-13 21:37 GMT
ஈரோடு
1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையான மாணவ- மாணவிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியது.
தேர்வுகள்
கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்ததால் கடந்த 2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. அப்போதே மே மாதம் வரை பள்ளிக்கூடங்கள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி வகுப்புகள் நடத்தப்பட்டு, தேர்வுகளும் திட்டமிட்டபடி தொடங்கின.
இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. கோடை வெயிலின் தாக்கம் மிகக்கடுமையாக இருந்ததால் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஆனால், திட்டமிட்டபடி 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்புவரை தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. 
சிறப்பு பயிற்சி
இதைத்தொடர்ந்து மாணவ- மாணவிகளுக்கு இன்று (சனிக்கிழமை) முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. மீண்டும் அடுத்த கல்வி ஆண்டுக்கான (2022-2023) வகுப்புகள் ஜூன் மாதம் 13-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி கல்வியாளர் ஒருவர் கூறியதாவது:-
2 ஆண்டுகளுக்கு பின்னர் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை கிடைத்து இருக்கிறது. கோடை விடுமுறைக்கு என்று ஒரு சிறப்பு உண்டு. மாணவ- மாணவிகள் எந்த கல்விச்சுமையும் இல்லாமல் இருப்பது இந்த கோடை விடுமுறையில்தான். ஆனால் தற்போது இந்த கோடை விடுமுறை கொண்டாட்டத்தை அபகரிக்கும் வகையில் கோடை கால சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் பல விஷயங்களின் தலையீடு இருக்கின்றன. பொதுவாக வேலைக்கு செல்லும் பெற்றோர்களை கொண்ட குழந்தைகளுக்கு இந்த பயிற்சிகள் சற்று அவசியமாக உள்ளன. பலரும் ஒரு மாதம் கூட தங்கள் குழந்தைகள் வீணாக கழித்துவிடக்கூடாது என்று சிறப்பு வகுப்புகளில் சேர்த்து விடுகிறார்கள். 90 சதவீதம் குழந்தைகள் பெற்றோரின் உந்துதலால் சிறப்பு பயிற்சிகளுக்கு சென்று நேரத்தை போக்குகிறார்கள்.
ஆனால், குழந்தைகள் நல்ல எதிர்காலத்தை பெற வேண்டும் என்றால் அவர்களை கட்டாயப்படுத்தி பயிற்சி வகுப்புகளில் சேர்ப்பதை விட்டு, கட்டாயப்படுத்தி உறவினர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். பல்வேறு உறவுகளுடன் வளர்ந்த தலைமுறை 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. ஆனால், இன்று சொந்தங்கள் யார் என்பது தெரியாத அளவுக்கு அண்டை வீட்டாரைக்கூட அன்னியர்களாக கொண்ட நகர வாழ்க்கை வாழும் மக்கள் கொரோனா காலத்தில் உறவுகளின் அருமையை உணர்ந்து கொண்டனர்.  பெரியவர்களுக்கு பல்வேறு வேலைகள், கடமைகள் இருக்கும். ஆனால் படிக்கும் குழந்தைகளுக்கு இந்த கால கட்டம் மட்டுமே உறவினர்களுடன் கலந்து வாழும் பருவம். எனவே உறவுகளுடன் உற்சாகமாக கொண்டாடும் கோடை விடுமுறையாக இந்த நாள் தொடங்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்