சேலம் அம்மாபேட்டை பகுதியில் 126 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்
சேலம் அம்மாபேட்டை பகுதிகளில் 126 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா தொடங்கி வைத்தார்.
சேலம்,
கண்காணிப்பு கேமராக்கள்
சேலம் மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறியில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கும் வகையிலும் மாநகர காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அம்மாபேட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட தண்ணீர் தொட்டி பஸ் நிறுத்தம், பாலாஜி நகர், மாருதி நகர், அதிகாரிப்பட்டி, குமரகிரிபேட்டை உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், பள்ளி மற்றும் கல்லூரிகள், பஸ் நிறுத்தங்கள், மெயின்ரோடு என 126 இடங்களில் தனியார் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் செயல்பாட்டினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி அயோத்தியாப்பட்டணம் அன்னை கஸ்தூரிபா திருமண மண்டபத்தில் நேற்று இரவு நடந்தது. உதவி கமிஷனர் சரவணகுமரன் வரவேற்றார். துணை கமிஷனர்கள் மாடசாமி, மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போலீஸ் கமிஷனர்
நிகழ்ச்சிக்கு போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா தலைமை தாங்கி, கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்துவதற்கு உறுதுணையாக இருந்த தன்னார்வலர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், கமிஷனர் நஜ்மல் ஹோடா பேசும்போது, அம்மாபேட்டை பகுதிகளில் ஏற்கனவே 132 கண்காணிப்பு கேமராக்கள் தொடங்கி வைத்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. இருப்பினும் தற்போது மேலும் 126 இடங்களில் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுவதன் மூலம் அவைகள் 24 மணி நேரமும் தொடர்ந்து தனது பாதுகாப்பு பணியை செய்வதோடு குற்றங்களை விரைவாக கண்டறிய பயன்படுகிறது. போலீஸ்காரர்கள் ஓய்வெடுக்கலாம். ஆனால் மூன்றாவது கண் என கூறப்படும் கேமராக்கள் எப்பொழுதும் ஓய்வில்லாமல் தனது வேலையை செய்வதால் பொதுமக்கள் அச்சமின்றி வாழ்ந்து வருகிறார்கள், என்றார்.