கோபி நகராட்சி கூட்டத்தில் தரையில் உட்கார்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர் தர்ணா

கோபி நகராட்சி கூட்டத்தில் தரையில் உட்கார்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டாா்.

Update: 2022-05-13 21:33 GMT
கடத்தூர்
கோபி நகராட்சியின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும் 12-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சுமையாபானு, நகராட்சி தலைவர் முன்பு திடீரென தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘தனது வார்டுக்கு உள்பட்ட சி.கே.எஸ். நகரில் கடந்த 10 நாட்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை சரி செய்யப்படவில்லை. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க வேண்டும்,’ என்றார். அவருக்கு ஆதரவு தெரிவித்து மற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அங்கு நின்றனர்.
இதைத்தொடர்ந்து நகராட்சி தலைவர் நாகராஜ் கூறுகையில், ‘நேற்று (அதாவது நேற்று முன்தினம்) முதல் குடிநீர் குழாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வார்டில் உள்ள பிரச்சினைகளை நகராட்சி தலைவர் என்ற முறையில் என்னிடம் தெரிவியுங்கள். அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக பாரபட்சமின்றி அனைத்து வார்டுகளிலும் பணிகள் நடைபெறும்,’ என்றார். 
இதில் சமாதானம் அடைந்த கவுன்சிலர் சுமையாபானு, தன்னுடைய தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்.

மேலும் செய்திகள்