மின்வாரிய ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை
மின்வாரிய ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் வட்ட தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் செயலாளர் பன்னீர்செல்வம் பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகாவிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், தற்போது இயற்கை சீற்றம், பலத்த காற்று, காலிப்பணியிடங்கள் போன்ற காரணங்களால் ஏற்படும் மின்தடைகளுக்கு மின்வாரிய ஊழியர்களை தொலைபேசியில் தகாத வார்த்தைகளால் திட்டுவதும், தாக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெரம்பலூர் வட்டத்தில் எசனை, வேப்பூர், தா.பழூர் பிரிவுகளில் மின்வாரிய ஊழியர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்.
ஊழியர்களுக்கு பணி மேற்கொள்ள போதுமான கால அவகாசம் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை கையாளக்கூட போதுமான அவகாசம் தராமல் அவசர கதியில் வாய்மொழி உத்தரவு வழங்கப்படுவதால் மின் விபத்து அதிகரித்து வருகிறது. இதுபோன்ற பிரச்சினையில் உரிய அலுவலர்கள் தாமதமாகவே தலையீடு செய்கின்றனர். இதனால் ஊழியர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மின்வாரிய ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.