நிதி ஆதாரத்தை பெருக்க எந்த திட்டமும் இல்லை: பஸ், மின்சார கட்டணத்தை விரைவில் தி.மு.க. அரசு உயர்த்தும் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
நிதி ஆதாரத்தை பெருக்க எந்த திட்டமும் இல்லை எனவும், விரைவில் பஸ், மின்சார கட்டணத்தை தி.மு.க. அரசு உயர்த்தும் எனவும் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.;
சேலம்,
இலவச தையல் பயிற்சி மையம்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரில் இலவச தையல் பயிற்சி மையம் சேலம் 5 ரோடு மெய்யனூர் மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தையல் பயிற்சி மையத்தை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஏழை, எளிய பெண்கள் பயன்பெறும் வகையில் அ.தி.மு.க. சார்பில் முதலில் எடப்பாடி சட்டசபை தொகுதியில் கொங்கணாபுரத்தில் இலவச தையல் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. தற்போது சேலம் மாநகர் மாவட்டம் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் ஒவ்வொரு தொகுதியிலும் இலவச தையல் பயிற்சி மையம் தொடங்கப்படும்.
தி.மு.க. ஆட்சி ஒரு ஆண்டு முடிவடைந்து உள்ளது. தேர்தலின் போது 500 வாக்குறுதிகளை கொடுத்தனர். ஒரு சிலவற்றை மட்டும் நிறைவேற்றி விட்டு 70 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய்யான செய்திகளை தி.மு.க. அரசு பரப்பி வருகிறது.
தி.மு.க. அரசு இரட்டை வேடம்
சொத்து வரி 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இது மக்களுக்கு பெரிய சுமை. தி.மு.க. அரசு மக்களுக்கு துரோகம் செய்து விட்டது. விவசாயிகள் பாதிக்ககூடாது என்ற நோக்கத்தில் அ.தி.மு.க. அரசு வேளாண் மண்டலம் கொண்டு வந்தது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் எந்த தொழிற்சாலையும் அமைக்க முடியாது. மு.க.ஸ்டாலின் நினைத்தாலும் டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலை கொண்டு வர முடியாது.
தற்போது டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலை கொண்டு வரப்போவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முதல்-அமைச்சர் முயல்கிறார். இதன்மூலம் பாமர மக்களையும், படித்தவர்களையும் தி.மு.க. அரசு ஏமாற்றி வருகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், வந்த பின்புமாக தி.மு.க. அரசு இரட்டை வேடம் போடுகிறது.
பஸ், மின் கட்டணம் உயரும்
ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று தேர்தலின் போது தி.மு.க. வாக்குறுதி அளித்தது. இதை நம்பி 16 லட்சம் அரசு ஊழியர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டனர். ஆனால் அரசு ஊழியர்களை நம்ப வைத்து தி.மு.க. அரசு ஏமாற்றி விட்டது. அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியம் இல்லை.
நிதி ஆதாரத்தை பெருக்க எந்த திட்டமும் அவர்களிடம் இல்லை. விரைவில் பஸ், மின் கட்டணத்தை தி.மு.க. அரசு உயர்த்தும். கட்டுமான பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவில் உயர்ந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.290 ஆக இருந்த ஒரு மூட்டை சிமெண்ட், தற்போது ரூ.490 ஆக உயர்ந்து உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.32 ஆயிரமாக இருந்த ஒரு டன் கம்பி தற்போது ரூ.92 ஆயிரமாக உயர்ந்து உள்ளது.
குடிமராமத்து திட்டம்
சென்னையில் 50 பேருக்கு மாற்று இடம் கொடுத்து விட்டு அதன் பிறகு அவர்களது வீட்டை இடித்திருக்க வேண்டும். தற்போது அவர்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர். 8 வழிச்சாலை திட்டம் நாட்டின் வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்டது. அப்போது தி.மு.க.வினர் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்தனர். தற்போது அந்த திட்டத்தை வரவேற்கின்றனர். அதிகாரத்திற்கு வர 8 வழிச்சாலை திட்டத்தை கையில் எடுத்தார்கள். தற்போது கம்யூனிஸ்டு உள்ளிட்ட எந்த எதிர்க்கட்சியும் 8 வழிச்சாலை திட்டம் பற்றி பேசவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில் நிலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை 4 மடங்கு உயர்த்தி வழங்கப்பட்டது. சட்ட போராட்டம் நடத்தி காவிரி நதி நீர் பிரச்சினையை ஜெயலலிதா தீர்த்து வைத்தார். தற்போது காவிரியில் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. குடிமராமத்து திட்டம் மூலம் ஏரி, குளம், குட்டைகளில் நீர் தேக்கி வைக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சர்வதேச ஏல மையம் அமைக்கப்பட்டு உள்ளன.
மானியங்கள் வழங்கப்பட்டன
பயிர் காப்பீடு திட்டம் மூலம் ரூ.10 கோடி இழப்பீடு அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டது. கஜா புயலின் போது விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தோம். அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள், கால்நடைகளுக்கு பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டன.
அ.தி.மு.க. ஆட்சியில் 14 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. பஸ்களுக்கு குறைந்த ஆயுட்காலம் இருக்க வேண்டும். தற்போது பஸ்களின் ஆயுட்காலத்தை உயர்த்தி உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் நெல் கொள்முதல் செய்து 24 மணி நேரத்தில் உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு சென்றன.
தற்போது விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டு மழை காலங்களில் நெல்மணிகள் முளைக்கும் நிலையை பார்க்கிறோம். விவசாயிகள், மக்களை பற்றி தற்போதைய தி.மு.க. அரசு கவலைப்படவில்லை.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தொடக்க விழா
முன்னதாக சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட தையல் பயிற்சி மையம் தொடக்க விழா நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் பன்னீர்செல்வம், அமைப்பு செயலாளர் செம்மலை, பொருளாளர் பங்க் வெங்கடாசலம், துணை செயலாளர் சவுண்டப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சூரமங்கலம் பகுதி செயலாளர் பாலு வரவேற்று பேசினார்.
இதில் பாலசுப்பிரமணியம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், மாநகர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப செயலாளர் கனகராஜ், கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, சண்முகம், பாண்டியன், மாரியப்பன், இணைச்செயலாளர் உமாராஜ், துணை செயலாளர் லட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஜான்கென்னடி, ராமச்சந்திரன், சரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.