‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
உடைந்த மின் கம்பம்
நசியனூர் ரோடு நல்லி தோட்டம் அருகே உள்ள தனியார் கியாஸ் குடோன் அருகே மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றியின் கான்கிரீட் கம்பத்தின் அடி பகுதி இரண்டாக உடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து கீழே விழலாம். இதனால் பெரிய மின் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் அருகில் கியாஸ் குடோன் உள்ளது. எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்மாற்றியின் கம்பத்தை மாற்ற மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.
ஆபத்தான குழி
ஈரோடு முத்தம்பாளையத்தில் இருந்து சூரம்பட்டி அணைக்கட்டு செல்லும் வழியில் ஆபத்தான குழி உள்ளது. மேலும் இந்த ரோட்டில் தெரு விளக்கு இல்லை. இதனால் இரவில் இந்த குழியில் பலர் விழுந்து விடுகிறார்கள். எனவே ஆபத்தான இந்த குழியை மூடவேண்டும்.
இளங்கோ, ஈரோடு.
குடிநீர் வசதி
ஈரோடு பஸ்நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடைபெறுகின்றன. இதனால் நடுவில் இருந்த பயணிகள் பயன்படுத்தி வந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளன. இதன்காரணமாக அதில் இருந்த குடிநீர் குழாய்களும் அகற்றப்பட்டுள்ளன. இதனால் பஸ்சுக்கு நிற்கும் பயணிகள் குடிநீர் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். எனவே மாநகராட்சி நிர்வாகம் ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் வசதி செய்துகொடுக்க ஆவன செய்யவேண்டும்.
மிதுனபிரியன், ஈரோடு.
தடுமாறும் வாகனங்கள்
ஈரோடு வெண்டிபாளையத்தில் இருந்து ரெயில்வே நுழைவு பாலம் வழியாக சோலாருக்கு செல்லும் ரோடு உள்ளது. இந்த ரோட்டில் சில மாதங்களுக்கு முன் கட்டப்பட்டுள்ள ரெயில்வே நுழைவு பாலத்தில் கீழ் உள்ள ரோடு ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நுழைவு பால ரோட்டை சீரமைப்பார்களா?
கந்தன், வெண்டிபாளையம்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
ஈரோடு பெரியவலசு நால் ரோட்டில் இருந்து முனியப்பசாமி கோவில் செல்லும் வீதியில் உள்ள பாரதிதாசன் வீதியில் ரோட்டோரத்தில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் காற்று அடிக்கும் போது பறந்து வீட்டிற்குள் விழுந்து விடுகிறது. மேலும் மாதக்கணக்கில் கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பிரகாஷ், ஈரோடு.
ரோட்டில் ஓடும் சாக்கடை நீர்
ஈரோடு சுவஸ்திக் கார்னரில் இருந்து சத்தி ரோட்டில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சத்தி ரோட்டில் சாக்கடை நீர் செல்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ராஜா, ஈரோடு.
குண்டும்- குழியுமான சாலை
ஈரோடு சூளையில் இருந்து எல்.வி.ஆர்.காலனி செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்ல முடியவில்லை. மேலும் மழை காலங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. எனவே குண்டும்- குழியுமான இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தேவா, எல்.வி.ஆர்.காலனி, ஈரோடு