தாளவாடியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை- வீட்டின் மீது மரம் விழுந்தது; 4 பேர் உயிர் தப்பினர்

தாளவாடியில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் வீட்டின் மீது மரம் விழுந்ததில் அங்கு தூங்கி கொண்டிருந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2022-05-13 20:57 GMT
தாளவாடி
தாளவாடியில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் வீட்டின் மீது மரம் விழுந்ததில் அங்கு தூங்கி கொண்டிருந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 
விடிய விடிய கனமழை
தாளவாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் நேரத்தில் வெயில் வாட்டி வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. 
இந்த நிலையில் தாளவாடி, தொட்டகாஜனூர், அருள்வாடி, திகினாரை, ஆசனூர், சூசைபுரம், தலமலை, பனக்கள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று மாலை சாரல்  மழை பெய்ய தொடங்கியது. பின்னர் விடிய விடிய கனமழை பெய்தது. பின்னர் மழை தூறிக்கொண்டே இருந்தது.
வீட்டின் மீது விழுந்த மரம்
கனமழையால் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நின்றது. மேலும் தலமலை வனப்பகுதியில் பெய்த மழையால் தாளவாடி ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக சூசைபுரம் அருகே உள்ள பண்ணாரி நகர் ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், அங்குள்ள தடுப்பணையும் நிரம்பி வழிந்தது. 
இதேபோல் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் மற்றும் குளம் குட்டைகள் நிரம்பின. இந்த நிலையில் தாளவாடி போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த மரம் ஒன்று நேற்று நள்ளிரவு திடீெரன வேருடன் சாய்ந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது. 
உயிர் தப்பினர்
இதில் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த அந்த வீட்டின் உரிமையாளர் சரவணன் (வயது 55), தாளவாடி பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் பவானியை சேர்ந்த பிரபு (37) கொடுமுடியை சேர்ந்த சண்முகம் (57) ஈரோட்டை சேர்ந்த பிரபு (37) என 4 பேர் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நேற்று காலையிலும் மழை தொடா்ந்து பெய்ததால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது. மேலும் மாணவ- மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு நனைந்தபடி சென்றனர். 

மேலும் செய்திகள்