இளம்பெண் மீது திராவகம் வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் தமிழ்நாட்டில் கைது
இளம்பெண் மீது திராவகம் வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டார். 16 நாட்களாக தலைமறைவாக இருந்த அவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் பதுங்கி இருந்தபோது சிக்கினார்
பெங்களூரு: இளம்பெண் மீது திராவகம் வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டார். 16 நாட்களாக தலைமறைவாக இருந்த அவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் பதுங்கி இருந்தபோது சிக்கினார்.
திராவகம் வீச்சு
பெங்களூரு ஹெக்கனஹள்ளி கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் 25 வயது இளம்பெண். இவர் சுங்கதகட்டேயில் உள்ள நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்தார். இந்த நிலையில் இளம்பெண்ணை, நாகேஷ்(வயது 29) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் தனது காதல் குறித்து இளம்பெண்ணிடம் நாகேஷ் கூறியுள்ளார். ஆனால் நாகேசின் காதலை ஏற்க இளம்பெண் மறுத்து விட்டார்.
இதனால் தன்னை காதலிக்கும்படியும், திருமணம் செய்து கொள்ளும்படியும் இளம்பெண்ணுக்கு, நாகேஷ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நாகேஷ் கடந்த மாதம்(ஏப்ரல்) 28-ந் தேதி, நிதி நிறுவனம் முன்பு வைத்து இளம்பெண் மீது திராவகம் வீசிவிட்டு தப்பி சென்றார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த இளம்பெண் உயிருக்கு போராடினார்.
தேடப்படும் நபர்
இதன்பின்னர் அந்த இளம்பெண் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காமாட்சிபாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தப்பி ஓடிய நாகேசை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் நாகேசை பற்றி போலீசாருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. நாகேசை கைது செய்ய 7 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு இருந்தது.
ஆனாலும் நாகேசை பற்றி எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்காமல் இருந்தது. நாகேஷ் ஆன்மிகவாதி என்று கூறப்பட்டதால் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திராவில் உள்ள கோவில்களில் நாகேசை போலீசார் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனால் நாகேசை தேடப்படும் நபர் என்றும் போலீசார் நோட்டீசு அடித்து தமிழ்நாடு, ஆந்திராவுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நாகேசை போலீசார் தொடர்ந்து தேடிவந்தனர்.
திருவண்ணாமலையில் கைது
இந்த நிலையில் தமிழ்நாடு திருவண்ணாமலையில் உள்ள ரமண மகரிஷி ஆசிரமத்தில் நாகேஷ் பதுங்கி இருப்பதாக காமாட்சிபாளையா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அந்த ஆசிரமத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காவி உடை அணிந்து இருந்த ஒரு வாலிபரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் அவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் நாகேஷ் என்பதும், இளம்பெண் மீது திராவகம் வீசிவிட்டு ஆசிரமத்திற்கு பக்தர்போல் வேடம் அணிந்து வந்து தங்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான நாகேசின் சொந்த ஊர் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் கோடியாளம் என்பது குறிப்பிடத்தக்கது.