சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு
சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு;
தஞ்சாவூர்:
தஞ்சை ரெயிலடியில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக புனரமைப்பு பணி நடைபெற்றது. இந்த பணி முடிவடைந்ததைதொடர்ந்து குடமுழுக்கு விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. அன்று மாலை பகவத் பிரார்த்தனை, புண்யாகவாசனம், எஜமானர் சங்கல்பம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் முதல் கால யாக பூஜை தொடங்கியது. பின்னர் நேற்றுமுன்தினம் காலை புண்யாகவாசனம், நித்யாராதனம், அக்னிபிரணயநம், நித்ய ஹோமம், மஹா சாந்தி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் 2-ம் கால யாக பூஜையும், அஷ்டபந்தனம், மருந்து சாற்றுதல், சதுர்தச கலச ஸ்நபனம், மஹா சாந்தி திருமஞ்சனம் ஆகிய பூஜைகளும் நடைபெற்றன. மாலையில் 3-ம் கால யாக பூஜையும், பூர்ணாஹூதியும் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து நேற்று காலை புண்யாகவாசனம் உள்ளிட்ட பூஜைகளும், கடம் புறப்பாடும் நடைபெற்றன. பின்னர், காலை 6.45 மணியளவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழக்கு நடைபெற்றது. இதையடுத்து, ஆஞ்சநேயர் பிரதிஷ்டை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.