தமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும்

தமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என்று ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.

Update: 2022-05-13 20:18 GMT
விருதுநகர், 
தமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என்று ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தெரிவித்தார். 
மத்திய அரசின் திட்டங்கள் 
விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:- 
 தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் பிரதமரின் திட்டச்செயல்பாடுகளில் குறைபாடு உள்ள நிலையில் மத்திய அரசு சார்பில் குறைதீர்க்கும் கூட்டம் தாலுகா வாரியாக நடத்தப்படும் என்று பா.ஜ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டது ஏற்புடையதல்ல. மாநில சுயாட்சிக்கு எதிரானதாகும்.
 ஏற்கனவே மாநில அரசு மக்களின் தேவைகளை அறிந்து குறைகள் இருந்தால் அதை தீர்ப்பதற்கு கூட்டங்களை நடத்தி வருகிறது. குறைகள் இருந்தால் அதை சுட்டிக்காட்ட எதிர்க்கட்சிகளுக்கு உரிமை இருக்கிறது. அதேபோன்று பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் குறைகளை சுட்டிக் காட்டலாம். ஆனால் மத்திய அரசை குறை தீர்க்கும் கூட்டத்தை மாநிலத்தில் நடத்துவதென்பது தேவையற்றது
தற்போதைய நிலையில் இலங்கையில் நிலையற்ற பொருளாதார சூழல் உள்ள நிலையில் அதனை பயன்படுத்தி தேவையான அழுத்தம் கொடுத்து தமிழக மீனவர் பிரச்சினைக்கும், வடகிழக்கு மாகாணத்தில் வாழும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கும் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 உடல் நலம் விசாரித்தார்
 தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சியினரும், காங்கிரஸ் கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர். இது சரியான கருத்தானது தான். எனவே தேர்தல் நேரத்தில் தி.மு.க. கூறியதை போல பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 இவ்வாறு அவர் கூறினார். 
பேட்டியின் போது சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் உடனிருந்தார்.
 முன்னதாக துரை வைகோ விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பஸ் விபத்தில் காயமடைந்த சாத்தூர் கல்லூரி மாணவியிடம் நலம் விசாரித்ததோடு விபத்தில் சிக்கி காயம் அடைந்த மாணவிகளுக்கு நல்ல முறையில் சிகிச்சையளித்த அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு நன்றியும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்